சுஜாதா எனும் எழுத்து ஆளுமை

இன்றைக்கும் நாம் ஏன் சுஜாதாவை மிஸ் செய்கிறோம் தெரியுமா ??

நண்பர் ஒருவர், தான் எழுதிய சிறுகதையை “கொஞ்சம் இம்ரூவ் பண்ணிக் கொடு” என்று சுஜாதாவிடம் கொடுக்கிறார். 

இவர் அதை முழுவதும் மாற்றி, திருத்தி எழுதிக் கொடுக்கிறார். அது நண்பன் பெயரில் வந்ததைக் கண்டு, நாமே எழுதலாமே என்று முயன்று ஒரு கதை எழுதி அனுப்புகிறார். “அதை எழுதும்போதுதான் எனக்கும் வார்த்தைகளைக் கோத்துவிளையாட முடியும் என்று கண்டுகொண்டேன். அப்படித்தான் எழுத்துத் துறைக்கு வந்தேன்” என்கிறார் சுஜாதா.

1963ல் முதல் சிறுகதை. அதற்குப் பிறகு நிற்காமல் ஓடிய குதிரை இது. எழுதாத துறைகள் இல்லை எனலாம். திருக்குறள், புறநாநூறு என்று இலக்கியங்கள் பற்றி எழுதியிருக்கிறார். கிட்னி ட்ரான்ஸ்ப்ளண்டேஷன் (transplantation) பற்றி நாவல் எழுதுகிறார். அதைப் படமாக்கும் விவாதத்தில், “டிஷ்யூ ரிஜக்‌ஷன்னா என்னன்னா..” என்று விஞ்ஞானம் பேசுகிறார். பீத்தோவனின் Symphony பற்றி எழுதுகிறார். உலகப்படங்கள் பற்றி விவாதிக்கிறார். “இதெல்லாம் நாலாயிர திவ்யப் பிரபந்தப் பாசுரங்கள்ல வந்ததுதானே.. உதாரணத்துக்கு..” என்று தாவுகிறார். லிமரிக் சொல்லிக் கொடுக்கிறார். கம்மிங்ஸ் (Cummings) கவிதைகள்தான் எனக்குப் பிடிக்கும் என்கிறார். பவுல்ஸ் (Powels ), வுட் ஹவுஸ் (Wodehouse) , ஓ,ஹென்றி (O Henry)  என்று ஆங்கில எழுத்தாளர்களைப் பற்றி எழுதிப் பரவலாக்குகிறார். எம்.டி. ராமநாதனின் சங்கீதம், ஓஸிபிஸாவின் ஜாஸ் இசை என்று கலந்து கட்டி அடிக்கிறார். இவர் ஒரு கவிதையைப் பாராட்டினால், அவர்மீது புகழ்வெளிச்சம் விழுந்து, அவரும் அதற்கு முயன்று உழைத்து முன்னேறுகிறார்.  நாற்பது வயதுக்கு மேல்தான் சினிமாவுக்குள் எட்டிப் பார்க்கிறார். ஆனாலும் திரைமொழியை தன் வசமாக்குகிறார்.

இவர் எழுதிக் கொண்டிருந்த காலத்தில் ஒரு கார்ட்டூன். ஒரு சிறுவன், சுஜாதா போல மீசை வைத்துக் கொண்டிருக்க ஒரு வரி கமெண்ட்: ‘சுஜாதா மீசை வெச்சுகிட்டா மட்டும் எழுத்தாளனாய்டுவியா?’    

வெறும் வார்த்தை விளையாட்டுகள் அல்லாமல், கணினி அச்சுமுறையில் ப்ரிண்ட் ஆகிக் கொண்டிருந்த காலத்திலேயே பல புதுமைகளைச் செய்தவர். ஒரு கதையில் கதாபாத்திரம் மாடிப்படியில் இருந்து கீழே இறங்குவதை..


         ற

                 ங் 

                          கி

                                   னா

                                             ன் - 
--என்று எழுதினார். 

இன்னொரு கதை, முடிவில் ‘இப்போது இந்தக் கதையின் ஆரம்ப வரிகளைப் படியுங்கள்’ என்றார்.

அதுதான் சுஜாதா. 

இவருக்கும் வாசகர்களுமான பிணைப்பு அலாதியானது.  காகிதச் சங்கிலிகள் நாவலைப் படித்துவிட்டு, சிறுநீரக அறுவைசிகிச்சை பற்றி, தொலைபேசியில் இவரிடம் அரை மணிநேரம் பேசி தெளிவு பெறுகிறார் ஒரு வாசகர்.  மிடில் ஈஸ்ட் விமானநிலையத்தில் இவரை அடையாளம் கண்டுகொண்ட வாசகர் ஒருவர், ஓடிப்போய் அங்கேயே ஒரு ரேடியோவும், டேப் ரெகார்டரும் இணைந்த  ‘டூ-இன்- ஒன்’ வாங்கிப் பரிசாய்த் திணிக்கிறார். மதுரை அரசு மருத்துவமனையை மையமாக வைத்து எழுதிய ‘நகரம்’ சிறுகதையைப் படித்துவிட்டு அந்த மருத்துவமனையின் டீன், இவரிடம் கடிதம் எழுதி விசாரிக்கிறார். . ‘வஸந்தைத் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என என் மகள் நச்சரிக்கிறாள். எங்கிருக்கிறான் அவன்?” என்று சுஜாதாவுக்கு வந்த தந்திகள் நிறைய. 

பெங்களூருவில் உள்ள பார்க் ஒன்றில் சுஜாதாவும், கமல்ஹாசனும் காரில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க,  வந்த இளைஞரிடம், ‘கமல் உங்க ஆட்டோகிராஃபுக்காக வெய்ட் பண்றார்” என்றிருக்கிறார் சுஜாதா. அந்த இளைஞர், ‘இல்லை சார். எனக்கு உங்க ஆட்டோகிராப்தான் வேணும்” என்கிறார் சுஜாதாவிடம். 

இவர் எழுத்துக்கு சீரியஸான எதிர்ப்புகளும் நிறைய வந்ததுண்டு. இவரது நாவல் ஒன்றைப் படித்துவிட்டுத்தான் தன் தங்கை நக்ஸல் இயக்கத்தில் சேர்ந்தார் என்று அந்தப் பெண்ணின் அண்ணன் பெங்களூரு சென்று மிரட்டுகிறார். ஒரு நாவலில் இவரது கதாபாத்திரமான வஸந்த் குண்டடிபட, ‘அவனைக் காப்பாற்று... நீ வேண்டுமானால் போய் ஆஸ்பத்திரியில் படுத்துக்கொள்’ என்று ஒரு பெண் தந்தி அனுப்புகிறார். தொடர்கதையில்,  பிடிக்காத அத்தியாயம் வந்தால், இவருடைய கதையை, சுக்குநூறாகக் கிழித்து போஸ்டில் அனுப்புவார்கள். “வாங்கிப் படித்த அவருக்கு, நிச்சயம் கிழித்து அனுப்பவும் உரிமை உண்டு” என்பார் இவர். ஒருநாவலை நிறுத்தச் சொல்லி மிரட்டல் வர, நிறுத்தப்படுகிறது. அதைப் பற்றி எழுதும்போது இப்படிச் சொல்கிறார்: ‘எனக்கு இடது கையில் எழுதிப் பழக்கம் இல்லை என்பதால் நிறுத்திக்கொண்டேன்”

இன்றைக்கு எழுதும் இளைய தலைமுறையிடம் எதாவது ஒரு வரியில், சிந்தனையில், உத்தியில் இருந்துகொண்டுதான் இருக்கிறார் சுஜாதா. சிறுகதை எழுத நிறைய உத்திகளைச் சொல்லிக்கொடுத்துக் கொண்டே இருந்தார் சுஜாதா.

"முதல் வரியிலேயே  வாசகனை கவருங்கள். ‘தலையில்லாத ஒரு ஆள் தெருவில் நடந்து வந்தான் என்று ஆரம்பியுங்கள். அடுத்தவரியில் ‘தலை என்றா சொன்னேன்.. தப்பு.. ஒரு விரல்தான் இல்லை’ என்று மாற்றிக் கொள்ளுங்கள். அதைவிடுத்து, ‘சார் தபால் என்ற குரலைக் கேட்ட சர்மா சாய்வு நாற்காலியில் சாய்ந்து கொண்டு...’ என்று ஆரம்பித்தால், படிப்பவன் அடுத்தபக்கத்துக்குத் தாவிவிடுவான்.’

எதிர்படும் எல்லாரிடமும் கதை உண்டு. அதை உணருங்கள். உங்களைப் பார்த்ததும் சௌக்கியமா என்று கேட்கிறான். முழுசாக நின்று கொண்டிருக்கிறீர்கள். அது என்ன சௌக்கியமா என்று கேள்வி என்று யோசித்து நூல் பிடித்தால், கதை பிறந்துவிடும்.’

இன்றைய கணினி யுகத்தில் ஏன் அவர் இன்மையை உணர்கிறோம் என்றால், இன்றைக்குப் பேசப்படும் பொருட்கள் எல்லாவற்றிற்கும் எளிய முறையில் அவரிடமிருந்து விளக்கங்கள் வந்து விழுந்திருக்கும்.  வாட்ஸப் வதந்திகளுக்கு சாட்டையடி பதில்கள் வந்திருக்கும். சட்டென்று தெறிக்கும் ட்விட்டுகள் இருந்திருக்கும். இவற்றின் எதிர்காலம் குறித்தும் பேசியிருப்பார். ஜிலேபி சுற்றும் வார்த்தை ஜாலமின்றி, எளிய முறையில் அறிவியலைக் கொண்டு சேர்த்திருப்பார். 

இவருக்கு எழுத்துதான் எல்லாம். யாரிடமாவது ஏதாவது பேசும்போது உருவாகிற சிறு பொறியை மூளைக்குள் பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டே இருந்து, சரியான தருணத்தில் கதையாக்குவார். பலராலும் பாராட்டப்பட்ட, ‘கரையெல்லாம் செண்பகப்பூ’ அப்படி உருவானதுதான். 

"கிராமத்தில் நடைபெறும் மிஸ்ட்ரி ஒண்ணு எழுதுங்களேன்’ என்று பிரபலம் ஒருவர் சொல்ல, அதை மனதில் இருத்திக் கொண்டு, தொடர்கதையாக எழுதியதுதான் அந்த நாவல். 

அப்படி சுஜாதாவைக் கேட்டுக் கொண்ட பிரபலம்.. இளையராஜா !!!

#WriterSujatha

Comments

Popular posts from this blog

வாழ்க்கை என்பது எவ்வளவு தூரம் ?

அடங்க மறு ...,,,