தஸ்தயேவ்ஸ்கி
தஸ்தயேவ்ஸ்கி : பிசாசும் சித்தாந்தவாதியும் : ஆக்டேவியோ பாஸ்

நோபல் பரிசு பெற்ற மெக்சிகோவை சேர்ந்த கவிஞரும், சிந்தனையாளருமான ஆக்டேவியோ பாஸ் (Octavio Paz) (1914-1998), லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர். கவிதை, தத்துவம், அரசியல் மற்றும் பண்பாட்டு விமர்சனம் எனப் பல தளங்களில் இயங்கிய இவரது எழுத்துக்கள், நவீன மனிதனின் அக முரண்பாடுகளையும், அரசியல் வரலாற்றின் வீழ்ச்சிகளையும் கூர்மையாகப் பகுப்பாய்வு செய்பவை எனலாம்.
ஆக்டேவியோ பாஸ் எழுதிய புகழ்பெற்ற “On Poets and Others” என்னும் கட்டுரைத் தொகுப்பில் இடம்பெற்றுள்ள “Dostoevski: The Devil and the Ideologue” என்ற கட்டுரை இங்கே மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளை இலக்கிய, இறையியல் தளங்களில் அணுகும் பொதுவான வழிமுறையில் இருந்து இக்கட்டுரை முற்றிலும் வேறுபடுகிறது. தஸ்தயெவ்ஸ்கியை இருபதாம் நூற்றாண்டின் அரசியல் மற்றும் சித்தாந்த வெறிகளின் தீர்க்கதரிசியாகப் பார்க்கும் ஆக்டாவியோ பாஸ், அவர் உருவாக்கிய கதாபாத்திரங்களின் அகத்தில் குடிகொண்டிருக்கும் பிசாசுகளையும், நவீன சமூகத்தின் கருத்தியல்வாதிகளையும் இணைத்து மிகவும் வித்தியாசமான கோணத்தில் அவரது படைப்புலகத்தை அணுகுகிறார்.
ஒரு நூற்றாண்டுக்கு முன்பாக, 1881-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதியன்று ஃபியோடர் தஸ்தயெவ்ஸ்கி காலமானார். அவர் வாழ்ந்த காலத்திலேயே அவரது சொந்த நாட்டில் அவருக்குப் பெரும் புகழ் கிடைத்திருந்தாலும், அவர் மறைவுக்குப் பிறகான காலகட்டத்தில் அவரது தாக்கம் மேலும் வளர்ந்து, ரஷ்யாவைத் தாண்டி ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் பரவியுள்ளது. இந்தத் தாக்கம் வெறுமனே இலக்கியம் சார்ந்ததாக மட்டும் இல்லாமல், ஆன்மீக ரீதியானதாகவும் உயிர்ப்புடையதாகவும் அமைந்திருக்கிறது. பல தலைமுறைகளைச் சேர்ந்த வாசகர்கள், அவரது நாவல்களை வெறும் புனைவுகளாக மட்டும் அனுகாமல், மனித ஆன்மாவைப் பற்றிய ஆய்வுகளாகவும் வாசித்துள்ளனர். அதுமட்டுமின்றி, உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான வாசகர்கள் அவரது கதாபாத்திரங்களைத் தங்களின் நீண்டகால நண்பர்களாகக் கருதி, மனதளவில் அவர்களோடு உரையாடியும் விவாதித்தும் வந்துள்ளனர்.
தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புலகத்தின் மேல் இளைஞர்கள் கொண்டிருந்த இந்தக் கட்டற்ற ஈடுபாட்டில் இயல்புக்கு மாறானது எதுவுமில்லை: நமக்கும் அவருக்கும் இடையில் ஒரு நூற்றாண்டு கால இடைவெளி இருப்பினும், தஸ்தயெவ்ஸ்கி நம்முடைய மாபெரும் சமகாலப் படைப்பாளியாகத் திகழ்கிறார். கடந்த கால எழுத்தாளர்களில் மிகச் சிலருக்கே இப்படிப்பட்ட ஒரு ‘நிகழ்காலத் தன்மை’ வாய்த்திருக்கிறது: அவரது நாவல்களை வாசிப்பது என்பது, இருபதாம் நூற்றாண்டின் வரலாற்றை வாசிப்பதற்கு ஒப்பானது.
ஆனால் அவரது இந்த நிகழ்காலத் தன்மை என்பது அறிவுப்பூர்வமான, இலக்கியரீதியான புதுமைகளால் வந்தது அல்ல. தன் ரசனைகளிலும் அழகியல் அக்கறைகளிலும் அவர் முற்றிலும் வேறொரு யுகத்தைச் சேர்ந்த எழுத்தாளரே. அவர் நீட்டி முழக்கி விரிவாக எழுதக்கூடியவர்; விசித்திரமான வகையில் அவரிடம் இழையோடும் நவீனமான நகைச்சுவை உணர்வு மட்டும் இல்லையென்றால், அவரது நாவல்களின் பல நூறு பக்கங்கள் நமக்குச் சலிப்பையே ஏற்படுத்தியிருக்கும்.
அவர் வாழ்ந்த வரலாற்று உலகம் நம்முடையது அல்ல. அவர் எழுதிய ‘Diary of a Writer’ நூலிலுள்ள பல பகுதிகள், தங்களின் ஸ்லாவிய-தேசியவாதத்தினாலும் (Slavism) யூத-எதிர்ப்பு வாதத்தினாலும் (anti-Semitism) எனக்குள் அருவருப்பை ஏற்படுத்துகின்றன. ஐரோப்பாவிற்கு எதிராக அவர் முன்வைக்கும் வன்மையான கண்டனங்கள், மெக்சிகோ மற்றும் லத்தீன் அமெரிக்க தேசியவாதத்தின் ஆற்றாமையையும் வெறுப்புணர்வுகளையுமே எனக்கு நினைவூட்டுகின்றன. இந்த லத்தீன் அமெரிக்கக் கண்டனங்களை விடவும் தஸ்தயெவ்ஸ்கியின் எழுத்துக்கள் வெகுவாக எழுச்சியூட்டக்கூடியவை என்பது வேறு விஷயம்.
வரலாற்றைப் பற்றிய அவரது பார்வை சில நேரங்களில் ஆழமானதாகவும், அதே சமயம் குழப்பம் நிறைந்ததாகவும் இருக்கிறது. ஸ்டெந்தால் (Stendhal) போன்ற ஓர் எழுத்தாளரிடம் நாம் கண்டு வியக்கும் விரைவான, கூர்மையான நிகழ்வு சார்ந்த புரிதல் அவரிடம் இல்லை. அதுபோல, ஒரு சமூகத்தின் அல்லது ஒரு காலகட்டத்தின் புறப்பரப்பைத் தாண்டி ஊடுருவிப் பார்க்கும் டாக்வில்லேயின் (Tocqueville) பார்வையும் அவரிடம் இல்லை. டால்ஸ்டாயைப் போல அவர் ஒரு மாபெரும் ஆவணப்பதிவாளரும் அல்ல. என்ன நடக்கிறது என்பதை அவர் வெறுமனே நமக்குச் சொல்வதில்லை; மாறாக, உண்மையில் என்ன நடந்துகொண்டிருக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக நம்மை பாதாளத்திற்குள் இறங்கும்படி அவர் கட்டாயப்படுத்துகிறார். அதாவது, நம்மை நாமே உற்று நோக்கும்படி அவர் நம்மை நிர்பந்திக்கிறார்.
நம் காலகட்டத்தின் நாடகங்களும் முரண்பாடுகளும் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதை முன்கூட்டியே கணித்ததால்தான், தஸ்தயெவ்ஸ்கி இன்றும் நம்முடைய சமகாலத்தவராக விளங்குகிறார். எதிர்கால நிகழ்வுகளைக் காணும் தீர்க்கதரிசனமோ, அருள்வாக்கோ அவருக்கு இருந்ததால் அவர் அதைக் கணிக்கவில்லை. மாறாக, மனித ஆன்மாக்களின் ஆழத்திற்குள் ஊடுருவிச் செல்லும் அசாத்தியத் திறன் அவரிடம் இருந்ததாலேயே அவரால் அதைக் கணிக்க முடிந்தது.
நவீன வெறுமைவாதத்தை (modern nihilism) முதன்முதலாக கவனத்தில் கொண்டவர்களில் ஒருவராக அவர் இருந்தார். சொல்லப்போனால் அவரே முதல் நபராகவும் இருக்கலாம். அந்த ஆன்மீகப் போக்கு குறித்து அவர் விட்டுச் சென்றுள்ள பதிவுகள் ஒருபோதும் மறக்க முடியாதவை. அவற்றின் ஆழமான பார்வையாலும், விவரிக்க முடியாத துல்லியத்தாலும் அவை இன்றும் நம்மை உலுக்கக் கூடியவை. பழங்கால வெறுமைவாதம் என்பது ஐயவாதம் (skepticism), இன்பவாதம்(epicureanism) ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருந்தது. விதியின் எதிர்பாராத விபத்துகளின் மத்தியிலும் மனச் சமநிலையை அடைவதே —அதாவது ஓர் உன்னதமான அமைதியை எட்டுவதே— அன்றைய வெறுமைவாதியின் இலட்சியமாக இருந்தது. புளூடார்க்கின் (Plutarch) கூற்றுப்படி, அலெக்சாண்டரையும் அவரது தோழர்களையும் பெரிதும் கவர்ந்த பண்டைய இந்தியாவின் வெறுமைவாதமானது, பைரோனிசத்திற்கு (pyrrhonism) ஒப்பான ஒரு தத்துவப் பார்வையாகவே இருந்தது. மேலும் அது ‘வெறுமையைத்’ தியானிப்பதிலேயே உச்சம் பெற்றது. நாகார்ஜுனர் மற்றும் அவரைப் பின்பற்றியவர்களைப் பொறுத்தவரை, வெறுமைவாதம் என்பது மதத்திற்கு இட்டுச்செல்லும் நுழைவாயில் (antechamber) மட்டுமே.
ஆனால் அறிவுபூர்வமான தளத்தில் இருந்து பிறந்திருந்தாலும், நவீன வெறுமைவாதம் ஒருவரை தத்துவார்த்தமான அமைதிக்கோ, பற்றற்ற பேரானந்த நிலைக்கோ இட்டுச் செல்வதில்லை. மாறாக அது எதையும் நம்பவோ, உறுதிப்படுத்தவோ முடியாத ஒரு இயலாமையாகவே ஒருவரில் வெளிப்படுகிறது. இது ஒரு தத்துவார்த்தமான தோல்வி என்பதைத் தாண்டி அடிப்படையில் ஒரு ஆன்மீக வீழ்ச்சியாக இருக்கிறது.
ஆதி அந்தமில்லாமல் மீளும் சுழற்சியில் ஆடிப்பாடிச் சிரித்துக் களிக்கும் ஒரு ‘முழுமையான வெறுமைவாதி’யாகவே நீட்சே தன் ‘அதீத மனிதனை’ உருவகிக்கிறார். இந்த உலகிற்கு என்று தனிப்பொருள் ஏதுமில்லை என்பதையும், காலம் காலமாகப் போற்றப்பட்ட விழுமியங்கள் தகர்க்கப்பட்டு இங்கு அர்த்தங்கள் அனைத்தும் ஆவியாய் மறைவதையும் அந்த அதீத மனிதனின் நடனம் ஒரு பெரும் கொண்டாட்டமாகப் பிரதிபலிக்கிறது. ஆனால் தஸ்தயெவ்ஸ்கி மிக யதார்த்தமாகப் படம்பிடித்துக் காட்டியபடி, ஒரு உண்மையான சூனியவாதி என்பவன் இவ்விதம் நடனமாடுவதோ சிரிப்பதோ கிடையாது. அவன் தன் அறைக்குள் சுற்றினாலும் அல்லது உலகத்தையே சுற்றி வந்தாலும் – அவனுக்கு இரண்டுமே ஒன்றுதான் – ஒருபோதும் ஓய்வெடுக்கவோ அல்லது எதையும் செய்யவோ இயலாதவனாய் அவன் அங்கும் இங்கும் அலைந்துகொண்டே இருக்கிறான். தன் மனப் பிரமைகளுடன் பேசியபடி, ஓயாமல் சுழன்றுகொண்டே இருக்க வேண்டிய சாபத்திற்கு அவன் ஆளாகியிருக்கிறான். டி சேடின் (Sade) சிற்றின்பவாதிகளின் வக்கிர நோயைப் போலவும்1, ‘மதிய வேளைப் பிசாசின்’ தாக்குதலுக்கு ஆளாகும் மத்திய காலத் துறவிகளின் ஆன்மச் சோர்வைப்போலவும் (accidie)2 அவனது இந்நோய் அமைந்திருக்கிறது. அது அவனுக்குள் ஒரு ஓயாத அதிருப்தியையும், எவர் மீதும் எதன் மீதும் அன்பு செலுத்த முடியாத பேராற்றாமையையும், இலக்கற்ற ஒரு தவிப்பையும் உருவாக்குகிறது. அதுமட்டுமில்லாமல் தன் மீதான சுயவெறுப்பையும், சுயமோகத்தையும் ஒரே சமயத்தில் ஏற்படுத்துகிறது. நவீன கால சூனியவாதியான அந்தப் பரிதாபத்திற்குரிய நார்சிசஸ், நீரின் ஆழத்தில் தன் பிம்பம் துண்டு துண்டாகச் சிதறிக் கிடப்பதைக் காண்கிறான். தான் வீழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற காட்சியே அவனை வசீகரிக்கிறது. தன்னைத்தானே நேருக்கு நேர் எதிர்கொள்ளும்போது அவனுக்குள் ஒருவிதக் குமட்டல் உணர்வு மேலோங்கினாலும், அவனால் தன் பார்வையை அங்கிருந்து திருப்ப முடிவதில்லை. பண்டையகால ஸ்பானிய எழுத்தாளர் கிவெடோ (Quevedo) இந்த மனநிலையை அன்றே துல்லியமாகக் கணித்திருக்கிறார்: ‘அதள பாதாளத்தில் இருக்கும் அந்த நீரில்தான், நான் என் மீதே காதல் வயப்பட்டுக் கொண்டிருந்தேன்’.
‘The Devils’ நாவலின் (நேரடிப் பொருளை விட, ‘The Possessed’ என்ற பழைய மொழிபெயர்ப்பே இதன் உள்ளடக்கத்திற்கு மிகவும் நெருக்கமானது) நாயகனான ஸ்டாவ்ரோகின், தன்னை நேசித்த டாரியா பாவ்லோவ்னாவிற்கு இவ்வாறு எழுதுகிறான்:
“என் வலிமையைச் சோதித்துப் பார்ப்பதற்காக நான் எல்லா இடங்களிலும் சோதனைகளை மேற்கொண்டேன். அந்தச் சோதனைகளின் போது, எனக்கு முன்னாலோ அல்லது மற்றவர்களுக்கு முன்னாலோ, அந்த வலிமை எப்போதும் எல்லையற்றதாகவே நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், அதை வைத்துக்கொண்டு நான் என்னதான் செய்வது? நீ எனக்கு எவ்வளவுதான் துணிவூட்டினாலும், அதை வைத்து என்ன செய்வது என்பது எனக்கு அப்போதும் தெரிந்திருக்கவில்லை, இப்போதும் தெரியவில்லை. ஒரு நல்ல காரியத்தைச் செய்து முடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்குள் எழுகிறது, அது எனக்கு மகிழ்ச்சியையும் அளிக்கிறது; அதே சமயம் ஒரு தீய காரியத்தைச் செய்ய விரும்பும் போதும் எனக்கு அதே போன்ற மகிழ்ச்சியே கிடைக்கிறது…. என் உணர்வுகள் அனைத்தும் மிக அற்பமானவை, ஒருபோதும் தீவிரமானவை அல்ல…. நான் ஒரு சிற்றின்பவாதியின் வாழ்க்கையில் என்னை ஈடுபடுத்திக்கொண்டேன். ஆனால் எனக்கு இந்த ஒழுக்கக்கேடான கட்டற்ற வாழ்க்கையின் மீது காதலோ அல்லது ஒரு சாதாரண ஈர்ப்போ கூட இல்லை… நீ என்னை நேசிப்பதால், என் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தந்துவிட முடியும் என்று நம்புகிறாயா? அவ்வளவு விவேகமில்லாமல் இருந்துவிடாதே. என்னைப்போலவே என் காதலும் மிகவும் பலவீனமானது…. இந்த மண்ணோடு யாருக்கெல்லாம் பிணைப்பு அற்றுப்போகிறதோ, அவர்கள் உடனடியாகத் தங்களின் கடவுள்களை இழந்துவிடுகிறார்கள் என்று ஒருநாள் உன் சகோதரன் என்னிடம் கூறினான். அதாவது, அவர்கள் தங்களின் நோக்கங்களை இழந்துவிடுகிறார்கள். இதைப் பற்றி எவரும் முடிவில்லாமல் விவாதிக்கலாம், ஆனால் என்னால் எல்லாவற்றையும் மறுக்க மட்டுமே முடிகிறது; ஆன்மாவின் எவ்வித உன்னதமும் இல்லாமல், எந்த ஒரு வலிமையும் இல்லாமல் வெறும் மறுப்பை மட்டுமே என்னால் செய்ய முடிகிறது. என்னைப் பொறுத்தவரை அந்த மறுப்புக் கூட மிகவும் பலவீனமானதுதான். எல்லாமே ஈர்ப்பற்று, சவச்சவென்று ஆகிவிட்டது. தாராள குணம் கொண்ட கிரிலோவால் அவனது சொந்தச் சிந்தனையைத் தாங்கிக்கொள்ள முடியாமல், அவன் தன் மண்டையைத் துப்பாக்கியால் தகர்த்துக்கொண்டான். அவனைப் போல என்னால் ஒருபோதும் என் மனநிலையை இழக்கவோ அல்லது ஒரு கொள்கையை முழுமையாக நம்பவோ முடியாது. என்னால் ஒருபோதும் என் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொள்ள முடியாது.”
இந்த நிலையை நாம் எவ்வாறு வரையறுப்பது? ஆன்மாவை இழந்த கைவிடப்பட்ட ஒரு நிலைமை. ஆன்மா மொத்தமும் வேரோடு பிய்த்தெடுக்கப்பட்ட ஒரு மனிதன் தான் ஸ்டாவ்ரோகின்.
ஆயினும், அந்தக் கடிதத்தை எழுதிய பிறகு ஸ்டாவ்ரோகின் ஒரு மாடி அறையில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொள்கிறான். இதிலும் ஒரு இறுதி முரண்பாடு இடம்பெறுகிறது: அவன் பயன்படுத்திய தூக்குக்கயிறு பட்டுத்துணியால் ஆனது. தற்கொலைக்குத் துணிந்த அவன், முன்னெச்சரிக்கையோடு மிகுந்த கவனத்துடன் அதில் சோப்புத் தடவி வைத்திருந்தான். மரணத்தின் மீதான ஈர்ப்பு, கூடவே வலியின் மீதான பயம்!
ஆனால், ஒரு சூனியவாதியின் மகத்துவம் அவனது மனோபாவத்திலோ அல்லது அவனது சிந்தனைகளிலோ இல்லை. மாறாக அவனது அசாத்தியமான தெளிவிலேயே(lucidity) அது அடங்கியிருக்கிறது. அற்பத்தனம் அல்லது கீழ்நிலை என்று ஸ்டாவ்ரோகின் குறிப்பிட்டதிலிருந்து இந்தத் தெளிவே அவனை மீட்டெடுக்கிறது.
அல்லது, தற்கொலை என்பது ஒரு தீர்வாக அமைவதற்குப் பதிலாக, அதுவே மற்றொரு சோதனையா? அப்படி இருந்தாலும் அது ஒரு முழுமையடையாத சோதனைதான். எதுவாயினும் வெறுமைவாதி என்பவன் ஓர் அறிவுசார் நாயகன் தான். ஏனெனில் தான் இறங்கியிருப்பது ஒரு நம்பிக்கையற்ற தேடல் என்பதை அவன் நன்றாக அறிந்திருந்தும், தன் பிளவுபட்ட ஆன்மாவின் ஆழத்திற்குள் துணிச்சலுடன் இறங்கி ஆராய முற்படுகிறான்.
‘நித்திய மீட்பு’ (Eternal Return) குறித்த அறிவைப் பெறாததால், ஸ்டாவ்ரோகினை ஒரு ‘முழுமையற்ற வெறுமைவாதி’ என்றே நீட்சே குறிப்பிடுவார். ஆனால், நம் சமகாலத்தவர்கள் பலரைப் போலவே, தஸ்தயெவ்ஸ்கியின் இந்தக் கதாபாத்திரமும் ஒரு முழுமையற்ற கிறிஸ்தவனே என்று கூறுவது இன்னும் பொருத்தமாக இருக்கும். அவன் தன் நம்பிக்கையை இழந்துவிட்டான். ஆனால் தொன்மையான அந்த அறுதியான உண்மைகளுக்குப் பதிலாக வேறு எதையும் அவனால் பதிலீடு செய்ய முடியவில்லை. அதே சமயம், தன் இருப்பை நியாயப்படுத்தவோ அல்லது அதற்கு அர்த்தம் கற்பிக்கவோ எந்தக் கொள்கைகளுமே இல்லாத ஒரு திறந்தவெளியில் வாழவும் அவனால் இயலவில்லை. கடவுள் மறைந்துவிட்டார், ஆனால் தீமை மறையவில்லை. மீபொருண்மையான (metaphysical) குறியீடுகள் தொலைந்துபோனாலும் பாவம் அழிவதில்லை. மாறாக, அது பாவத்திற்கு ஒரு வகையான அழிவின்மையையே (immortality) அளிக்கிறது. பாவமன்னிப்பையும் மீட்பையும் முன்வைக்கும் கிறிஸ்தவ நன்னம்பிக்கையை விட, ஒரு வெறுமைவாதி அறிவுசார் தத்துவம்(Gnostic) அளிக்கும் அவநம்பிக்கைக்கே மிக நெருக்கமாக இருக்கிறான். கடவுள் என்ற ஒருவர் இல்லை என்றால் பாவமன்னிப்பும் இல்லை. அதே நேரம் தீமையும் ஒழிந்துவிடுவதில்லை. இதனால், பாவம் என்பது தற்செயலாக நடக்கும் ஒரு விபத்து அல்லது தற்காலிக நிலையாக இல்லாமல், மனிதகுலத்தின் நிரந்தரமான பண்பாக மாறிவிடுகிறது.
இது அகஸ்டீனிய (Augustinian) தத்துவத்தின் நேரடி தலைகீழாக்கமாக இருக்கிறது: இங்கே ‘தீமையே இருத்தலாக’ (evil is being) மாறுகிறது. ஒரு இலட்சியவாதி (utopian) சொர்க்கத்தை பூமிக்குக் கொண்டுவந்து, நம்மையெல்லாம் கடவுள்களாக மாற்ற விரும்புவான். ஆனால் வெறுமைவாதியோ, தான் பிறப்பிலேயே சபிக்கப்பட்டவன் என்பதை அறிவான். அவனைப் பொறுத்தவரை இந்தப் பூமி ஏற்கனவே ஒரு நரகம்தான்.

வெறுமைவாதி குறித்த இந்தச் சித்திரம், தஸ்தயெவ்ஸ்கியின் சுயசரிதையா? ஆமாம் என்றும் சொல்லலாம், இல்லை என்றும் சொல்லலாம். ஏனெனில், அவர் வெறுமைவாதத்திலிருந்து தப்பிக்க தற்கொலையையோ அல்லது எதிர்மறையான பண்பையோ நாடவில்லை. மாறாக, தன் எழுத்தின் வழியாக வாழ்வின் நேர்நிலை ஏற்பையும் (affirmation) பெருமகிழ்ச்சியையுமே நாடுகிறார். அறிவுஜீவிகளைப் பீடித்த நோயான இந்தச் வெறுமைவாதத்திற்கு, திமித்ரி கரமசோவின் உயிரோட்டமான எளிமையோ அல்லது அலியோஷாவின் தெய்வீகப் பெருமகிழ்ச்சியோதான் தீர்வாக அமைகிறது. எப்படியாயினும், இதற்கான விடை தத்துவத்திலோ சிந்தனைகளிலோ இல்லை. அது வாழ்விலேயே பொதிந்துள்ளது. கள்ளமற்ற எளிய மனிதர்களின் வெகுளித்தனமே மறுமைவாதத்திற்கான ஆகச்சிறந்த மறுப்பாக இருக்கிறது.
தஸ்தயெவ்ஸ்கியின் உலகம், ஒரே நேரத்தில் மிகச் சாதாரணமானவர்களாகவும் அதேசமயம் அசாதாரணமானவர்களாகவும் விளங்கும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளால் நிரம்பியுள்ளது. அவர்களில் சிலர் துயரத்தின் பிடியில் சிக்கியவர்கள். வேறு சிலரோ சிற்றின்பங்களில் திளைப்பவர்கள். சிறுமையின் இருளிலும் சிலர் பாடி மகிழ்கிறார்கள்; ஆனால் வளமான வாழ்வைக் கொண்ட வேறு சிலரோ விரக்தியில் உழல்கிறார்கள். அங்குப் புனிதர்களும் இருக்கிறார்கள், குற்றவாளிகளும் இருக்கிறார்கள்; முட்டாள்களும் உண்டு, மேதைகளும் உண்டு; ஒரு குவளை நீரைப் போலத் தூய்மையான பக்தி கொண்ட பெண்களும், சொந்தப் பெற்றோர்களாலேயே வதைக்கப்படும் தேவதைகளான குழந்தைகளும் அங்கு வாழ்கிறார்கள். (குழந்தைப் பருவம் குறித்த பிராய்டின் பார்வையிலிருந்து தஸ்தயெவ்ஸ்கியின் பார்வை எவ்வளவு மாறுபட்டு இருக்கிறது!).
அது குற்றவாளிகளும் நீதிமான்களும் சரிசமமாக உலாவும் ஒரு உலகம்: ஏனென்றால் அவர்கள் இருவருக்குமே பரலோகத்தின் வாயில்கள் திறந்தே கிடக்கின்றன. அங்கு ஒவ்வொருவரும் தங்களை மீட்டுக்கொள்ளவும் முடியும் அல்லது தங்களை முழுமையாக அழித்துக்கொள்ளவும் முடியும். ஃபாதர் சோசிமாவின் சடலத்தில் இருந்து வீசும் அழுகிய துர்நாற்றமானது, அவர் எவ்வளவுதான் சிறந்த பக்திமானாக இருந்தபோதிலும் ‘புனிதர்களுக்குரிய நறுமணத்தோடு’ மரணிக்கவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது. இன்னொரு புறம், சைபீரியச் சிறையில் தன்னுடனேயே இருந்த கொள்ளையர்களையும் குற்றவாளிகளையும் நினைவுகூர்ந்து தஸ்தயெவ்ஸ்கி இவ்வாறு குறிப்பிடுகிறார்: “அங்குள்ள மனிதன் மிக விரைவாகவே, மனிதர்களை மதிப்பிடும் எல்லா அளவுகோல்களையும் தாண்டிச் சென்றுவிடுகிறான்.” எந்தச் சட்டகத்துக்குள்ளும் அடங்காத உயிரினமான இந்த மனிதனால், எந்தக் கணத்திலும் தன்னைத்தானே மீட்டுக்கொள்ள முடியும். தஸ்தயெவ்ஸ்கியின் கிறிஸ்தவப் பார்வையானது கால்டெரான் (Calderon), டிர்சோ டி மோலினா (Tirso de Molina), மற்றும் மிரா டி அமெஸ்குவா (Mira de Amescua) போன்றோர் முன்வைத்த சுதந்திரம், இறையருள் போன்ற கருத்தியல்களுக்கு வெகு நெருக்கத்தில் இருக்கிறது.
தஸ்தயெவ்ஸ்கியின் படைப்புகளில் வரும் புனிதர்களுக்கும் விலைமகளிருக்கும், குற்றவாளிகளுக்கும் நீதிமான்களுக்கும் மனிதத்தன்மையை மீறிய ஒரு அதீதமான யதார்த்தம் வாய்த்திருக்கிறது; அதாவது, அவர்கள் வழக்கத்திற்கு மாறான வேறொரு யுகத்தைச் சேர்ந்த மனிதர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல வருகிறேன். தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த அவர்களுடைய யுகம் அழிவின் விளிம்பில் இருக்கிறது.
இந்த விஷயத்தில் மார்க்ஸ் மிகவும் தெளிவான பார்வையைக் கொண்டிருந்தார்: முதலாளித்துவச் சந்தை மற்றும் தொழில்வளர்ச்சி ஆகிய இரண்டின் கூட்டுச் செயல்பாட்டினால், பாரம்பரியமான பிணைப்புகள் சிதைந்துபோகும் என்பதையும், பழைய வாழ்க்கை முறைகள் அரிக்கப்பட்டு அழியும் என்பதையும் அவர் முன்னரே கணித்திருந்தார். ஆனால், தங்களை மார்க்ஸின் வாரிசுகள் என்று கூறிக்கொண்டாலும், இருபதாம் நூற்றாண்டில் சோசலிசக் கனவுகளையும் லட்சியங்களையும் சிதைத்தழிக்கப் போகும் ஒரு புதிய வகை மனிதர்கள் தோன்றுவார்கள் என்பதை மார்க்ஸால் கணிக்க முடியவில்லை.
இந்த வகை மனிதர்களைப் பற்றி முதன்முதலில் விவரித்தவர் தஸ்தயெவ்ஸ்கிதான். அவர்களை நமக்கு நன்றாகவே தெரியும், ஏனென்றால் இன்றைய காலகட்டத்தில் அவர்களின் எண்ணிக்கை கணக்கிலடங்காதது. அவர்கள்தான் கருத்தியல்களின் (ideologies) பெயரால் பிரிவினைவாதம் பேசும் வெறியர்கள். நம் காலத்தய ஸ்டாவ்ரோகின்களும் இவான்களும் இவர்கள்தான். இவானின் சீடனும், சொந்தத் தந்தையையே கொன்றவனுமான ஸ்மெர்டியாகோவ்தான் ஸ்டாலின் மற்றும் அவரைப் போன்ற பலருக்கும் முதல் முன்மாதிரி (prototype). இந்தப் பிரிவினைவாதிகள், வெறுமைவாதிகளுடைய அசாத்தியத் தெளிவிற்கு மாறாக அவர்களின் நம்பிக்கையின்மையை மட்டும் சுவீகரித்துக் கொண்டார்கள். அந்த நம்பிக்கையின்மையை அவர்கள் மிகவும் கீழ்த்தரமான புதுவகை மூடநம்பிக்கையாகவும் மாற்றிவிட்டார்கள். இவான், ஸ்டாவ்ரோகினைப் போலல்லாமல், தாங்கள் பிசாசுகளால் பீடிக்கப்பட்டிருக்கிறோம் என்ற உண்மையைக் கூட அவர்கள் அறியாததாலேயே, தஸ்தயெவ்ஸ்கி அவர்களை ‘பீடிக்கப்பட்டவர்கள்’ (the possessed) என்று அழைக்கிறார். இதனால்தான் விவிலியத்தில் வரும் பன்றிகளோடு அவர்களை அவர் ஒப்பிடுகிறார் (லூக்கா 7:31—35).
தங்களின் பழைய நம்பிக்கையை இழக்கும்போது, அவர்கள் ‘முன்னேற்றம், சமூகம் மற்றும் புரட்சிகர இலட்சியவாதங்கள் (utopias)‘ போன்ற போலிப் பகுத்தறிவுச் சிலைகளை வழிபடத் தொடங்குகிறார்கள். அவர்கள் தங்கள் பெற்றோரின் மதத்தை நிராகரித்துவிட்டார்களே தவிர, ஒட்டுமொத்தமாக மதத்தையே நிராகரித்துவிடவில்லை: கிறிஸ்துவுக்கும் கன்னி மேரிக்கும் பதிலாக, ஒரு துண்டுப் பிரசுரத்திலிருந்து (pamphlet) எடுக்கப்பட்ட இரண்டு மூன்று கருத்துகளைத் தெய்வமாக ஆராதிக்கிறார்கள். இவர்கள்தான் நம் காலத்து தீவிரவாதிகளின் மூதாதையர்கள். நாம் ‘கருத்தியல்’ (ideology) என்று அழைக்கும் மதத்தின் சீரழிவால் பீடிக்கப்பட்ட ஒரு நோயுற்ற சமூகமே தஸ்தயெவ்ஸ்கியின் உலகம். அவரது உலகம்தான், நம்முடைய நிகழ்கால உலகின் துல்லியமான முன்வடிவமாக (prefiguration) இருக்கிறது.

தஸ்தயெவ்ஸ்கி தன் இளமைக் காலத்தில் ஒரு புரட்சியாளராக இருந்தார். அவரது அரசியல் செயல்பாடுகளுக்காகச் சிறையிலடைக்கப்பட்டு, மரண தண்டனையும் விதிக்கப்பட்டு, பின்னர் அதிலிருந்து அவர் மன்னிக்கப்பட்டார். அவர் பல ஆண்டுகளைச் சைபீரியச் சிறையில் கழித்தார். நவீன ரஷ்யாவின் வதைமுகாம்கள் (concentration camps) என்பது ஜார் மன்னர்களின் ஒடுக்குமுறை அமைப்பிலிருந்து சுவீகரிக்கப்பட்டு, இன்னும் நேர்த்தியாகவும் பிரம்மாண்டமாகவும் வளர்த்தெடுக்கப்பட்ட ஒரு தொடர்ச்சி தான். அங்கிருந்து திரும்பியதும் அவர் தன் பழைய தீவிரவாத நிலைப்பாடுகளுடனான உறவை முற்றிலுமாகத் துண்டித்துக் கொண்டார். ஒரு பழமைவாதியாகவும், தீவிரக் கிறிஸ்தவராகவும், முடியாட்சி ஆதரவாளராகவும், தேசியவாதியாகவும் மாறினார்.
அப்படியிருந்தாலும், அவரது படைப்புகளை வெறும் கருத்தியல் வரையறைகளுக்குள் (ideological definition) சுருக்கிப் பார்ப்பது முற்றிலும் தவறாகும். அவரது நாவல்களில் சிந்தனைகளுக்கு (ideas) மிக முக்கிய இடமிருந்தாலும், அடிப்படையில் அவர் ஒரு கருத்தியல்வாதி அல்ல. அவர் ஒரு நாவலாசிரியர். அவரது கதாபாத்திரங்களில் ஒருவனான திமித்ரி கரமசோவ் இவ்வாறு கூறுவான்: ‘வாழ்க்கையின் அர்த்தத்தை நேசிப்பதை விட, நாம் வாழ்க்கையையே அதிகம் நேசிக்க வேண்டும்.’ இவானுக்கு ஒரு பதிலாக திமித்ரி அமைகிறான்; ஆனால் அதுவே ‘முழுமையான பதில்’ அல்ல. தஸ்தயெவ்ஸ்கி ஒரு கருத்துக்கு எதிராக இன்னொரு கருத்தை நிறுத்தவில்லை. மாறாக, ஒரு மனித யதார்த்தத்திற்கு எதிராக மற்றொரு மனித யதார்த்தத்தையே முன்வைக்கிறார்.
ஃப்ளாபர்ட் (Flaubert), ஜேம்ஸ் (James), அல்லது ப்ரூஸ்ட் (Proust) போன்றோரின் எழுத்துக்களில் இருந்ததைப் போலல்லாமல், தஸ்தயெவ்ஸ்கிக்குக் கருத்துகள் என்பவை முற்றிலும் உண்மையானவை. எனினும், அந்தச் சிந்தனைகள் தமக்குத் தாமே உண்மையானவையாக இல்லாமல், மனித இருத்தலின் ஒரு பரிமாணமாகவே (dimension of existence) அவர் முன் நிஜமாகின்றன. மனித உருக்கொண்ட, அதாவது மனிதனின் வாழ்வோடு பின்னிப்பிணைந்த சிந்தனைகள் (embodied ideas) மட்டுமே அவருக்கு ஆர்வமூட்டக்கூடியவையாக இருந்தன. அந்தச் சிந்தனைகளில் சில கடவுளிடமிருந்து, அதாவது இதயத்தின் ஆழத்திலிருந்து பிறக்கின்றன; மற்றவை—அதில் பெரும்பாலானவை—பிசாசிடமிருந்து, அதாவது மனித மூளையிலிருந்து பிறக்கின்றன.
மத்திய காலத்து மதகுருமார்களுக்கு மனித ஆன்மா எப்படி ஒரு போர்க்களமாக இருந்ததோ, அதே போலத்தான் நவீனகால அறிவுஜீவிகளுக்கு அவர்களின் மனசாட்சியே ஒரு போர்க்களமாக இருக்கிறது. இந்தப் பின்னணியில் வைத்துப் பார்க்கும்போது, தஸ்தயெவ்ஸ்கியின் நாவல்கள் என்பவை மதரீதியான நீதிக்கதைகளாகவே (parables) விரிகின்றன. மேலும் அவரது கலை, நவீன யதார்த்தவாதத்தை விடப் புனிதர் அகஸ்டின் மற்றும் பாஸ்கல் ஆகியோரின் படைப்புகளுக்கே மிகவும் நெருக்கமாக இருக்கிறது. அதே சமயம், மனித மனங்களை அவர் பகுப்பாய்வு செய்திருக்கும் அந்த அசாத்தியத் துல்லியத்தினால், அவரது படைப்புகள் பிராய்டின் வருகையை முன்னரே கணிப்பது மட்டுமின்றி, சில வகைகளில் பிராய்டையே தாண்டிச் சென்றுவிடுகின்றன.
மனப்பிளவு (psychic schism) மற்றும் பிளவுபட்ட மனசாட்சி எனப்படும் இந்த நவீனகால நோய் குறித்த மிக ஆழமான, முழுமையான பகுப்பாய்வை அளித்தமைக்கு நாம் தஸ்தயெவ்ஸ்கிக்கே கடமைப்பட்டுள்ளோம். அவரது இந்த விளக்கம் ஒரே நேரத்தில் உளவியல் ரீதியானதாகவும், அதே சமயம் மத ரீதியானதாகவும் அமைகிறது.
ஸ்டாவ்ரோகின் மற்றும் இவான் ஆகிய இருவருமே மனப் பிரமைகளுக்கு ஆளாகிறார்கள். அவர்கள் பிசாசுகளின் உருவங்களைக் காண்கிறார்கள், அவற்றுடன் பேசவும் செய்கிறார்கள். அதே நேரத்தில், அவர்கள் இருவருமே நவீன காலத்து மனிதர்கள் என்பதால், தங்களின் முன் தோன்றும் அந்த உருவங்களைத் தங்களின் மனத்தடைகள் என்றே காரணம் என்றே கற்பிதம் செய்துகொள்கிறார்கள். அதாவது இவை தங்களின் துயரமுற்ற ஆன்மாக்களின் வெளிப்பாடுகளே (projections) என்று நம்புகிறார்கள். ஆனால், தாங்கள் அளிக்கும் அந்த விளக்கத்தின் மீது அவர்கள் இருவருக்குமே முழுமையான நம்பிக்கை இருப்பதில்லை. தங்களைத் தேடிவரும் அந்த அரூப உருவங்களோடு உரையாடும்போதெல்லாம், ஒரு கட்டத்தில் விரக்தியின் விளிம்பிற்குச் சென்று, அவற்றுக்கு நிஜமாகவே இருப்பு இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் மீண்டும் மீண்டும் தள்ளப்படுகிறார்கள். ஆம், அவர்கள் உண்மையிலேயே பிசாசோடுதான் உரையாடுகிறார்கள்.
இந்த மனப்பிளவு குறித்த தன்னுணர்வு மிகவும் கொடூரமானது. அதாவது, பிசாசால் பீடிக்கப்படுவது என்றால், தங்களுக்குள் இருக்கும் ‘நான்’ என்ற ஒற்றைத்தன்மை உடைந்து சிதறிவிட்டது என்பதையும், தங்களின் சொந்தக் குரலையே வேறு ஏதோ ஓர் அந்நியன் அபகரித்து ஆக்கிரமித்துவிட்டான் என்பதையும் உணர்வதாகும். அந்த அந்நியன் நிஜமாகவே ஒரு பிசாசா அல்லது நாம்தானா? இதற்கு நாம் எந்தப் பதிலைச் சொன்னாலும், அங்கே ஒரு மனிதனின் தனிப்பட்ட அடையாளம் துண்டாடப்பட்டுவிட்டது என்பதே உண்மை.

இந்தப் பகுதிகளை வாசிப்பது நமக்கே ஒரு பிரமையைக் காண்பது போன்ற உணர்வைத் தருகிறது. இவானும் ஸ்டாவ்ரோகினும் தங்களின் பிசாசுகளோடு நடத்தும் உரையாடல்கள், ஏதோ மிகச் சாதாரணமான அன்றாட நிகழ்வுகளைப் போல மிகுந்த யதார்த்தத்துடன் விவரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் அபத்தமான சூழல்களும், முரண்நகை நிரம்பிய எண்ண ஓட்டங்களும் விரவிக் கிடக்கின்றன. அங்குச் சில நேரங்களில் அச்சமே நம்மைச் சிரிக்க வைக்கிறது; அடுத்த கணமே அது நம் இரத்தத்தை உறையச் செய்துவிடுகிறது.
இவற்றை வாசிக்கும்போது நாம் ஒரு வகையான குழப்பம் கலந்த ஈர்ப்பை உணர்கிறோம். ஏனெனில், அங்கு தொடங்கும் அந்த உளவியல்ரீதியான சித்தரிப்பு, நமக்குத் தெரியாமலேயே மீபொருண்மை ஊகமாக(metaphysical speculation) மாறுகிறது. அதுவே பின்னர் மதம்சார் தரிசனமாக வடிவெடுக்கிறது. இறுதியாக, அந்த மதரீதியான தரிசனமானது அமானுஷ்யத்தோடு அன்றாட யதார்த்தத்தையும், விகாரத்தோடு கீழ்மையையும் விவரிக்க முடியாத வகையில் ஒன்றாகக் கலந்து பிணைக்கும் ஒரு கதையாக உருமாறிவிடுகிறது.
நவீன இலக்கியங்களில் தோன்றும் பிசாசுகளில், தஸ்தயெவ்ஸ்கியின் பிசாசுகள் நம்பத்தகுந்த வகையில் முற்றிலும் தனித்துவமானவை. பதினெட்டாம் நூற்றாண்டிலிருந்து, நம்முடைய கவிதைகளிலும் நாவல்களிலும் வலம்வரும் அரூபங்கள் நம்பகத்தன்மையற்றவையாகவே இருக்கின்றன. அவை வெறும் நகைச்சுவைக் கதாபாத்திரங்களாகவும், அவற்றின் மொழியும் குணாதிசயங்களும் பகட்டானவையாகவும் அதே சமயம் சகிக்க முடியாதவையாகவும் உள்ளன.
கோதே (Goethe) மற்றும் வாலரி (Valery) ஆகியோரின் பிசாசுகள், அவற்றின் அதீத அறிவுஜீவித்தனம் மற்றும் குறியீட்டுத் தன்மையால் சற்றே ஏற்றுக்கொள்ளும்படி இருக்கின்றன. அதேபோல, திட்டமிட்ட முரண்நகையுடன் கற்பனைக் கதைகளாகத் தங்களை வெளிப்படுத்திக்கொள்ளும் பிசாசுகளும் ஏற்றுக்கொள்ளக்கூடியவையே: நெர்வால் (Nerval) எழுதிய ‘தி என்சான்டட் ஹேண்ட்’ (The Enchanted Hand) அல்லது கசோட்டேயின் (Cazotte) சுவாரஸ்யமான ‘டெவில் இன் லவ்’ (Devil in Love) ஆகியவற்றில் வரும் பிசாசுகளை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். ஆனால் நவீனகாலப் பிசாசுகளோ, தாங்கள் பிசாசுகள் என்று தம்பட்டம் அடித்துக்கொள்வதோடு, தாங்கள் பாதாள உலகத்திலிருந்து வந்தவர்கள் என்பதை நமக்கு உணர்த்த தங்களால் ஆன அனைத்தையும் செய்கின்றன. அவை அமானுஷ்ய உலகத்தில் புதிதாக அந்தஸ்து பெற்றவர்களைப் போல நடந்துகொள்கின்றன.
தஸ்தயெவ்ஸ்கியின் பிசாசுகளும் நவீனமானவைதான். ஆனால் அவை சிற்றின்ப வேட்கையும், ஆடம்பரமும், தந்திரமும், சற்றே முட்டாள்தனமும் கொண்ட பழையகால(medieval) பிசாசுகளையோ, பரோக் (baroque) பிசாசுகளையோ ஒத்திருக்கவில்லை. தஸ்தயெவ்ஸ்கியின் பிசாசுகள் நம்முடைய சமகாலத்தவர்கள். சொல்லப்போனால், அவை மிகத் துல்லியமான நடைமுறை யதார்த்தத்தைக் கொண்டுள்ளன. தீமைக்கும் நலிவிற்கும்(infirmity) இடையிலும், பிசாசால் பீடிக்கப்படுவதற்கும் (possession) சுயபகுப்பாய்விற்கும் (reflection) இடையிலும் உள்ள மறைமுகமான ஒற்றுமையே அவர் கண்டறிந்த மாபெரும் உண்மை எனலாம். அவரது பிசாசுகள் தர்க்கம் பேசுகின்றன; சொல்லப்போனால், மனநல மருத்துவர்களைப் போல, தங்களுக்கு இருப்பே இல்லை என்பதையும் தாங்கள் வெறும் கற்பனையானவர்கள் என்பதையும் நிரூபிக்க அவை முயல்கின்றன. அவை நம்மிடம், “நான் உனக்குள் இருக்கும் ஒரு தீராத வெறியைத் தவிர வேறொன்றுமில்லை” என்று சொல்கின்றன. பின்னர், “இந்த வெறியாக வெளிப்படும் வெறுமை நானே. நான் உன்னுடைய தீராத வெறி; நான் உன்னுடைய வெறுமை” என்றும் கூறுகின்றன.
பதிலளிக்க முடியாத இந்த வாதங்களின் மூலமாகவே அவை நம்மை (கூடவே தங்களையும்) வீழ்த்தி வெற்றிபெறுகின்றன. இவான், ஸ்டாவ்ரோகின் என்ற இரண்டு அறிவுஜீவிகளும் அவற்றை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. ஏனென்றால், ஒரு பிசாசால் மட்டுமே இப்படித் தர்க்கரீதியாகப் பேச முடியும் என்பதால், அவை உண்மையாகவே பிசாசுகள்தான். ஆனால், இதையெல்லாம் வெறும் நோயுற்ற மனதின் பிரமைகள் மட்டுமே என்று அவர்கள் தங்களைத் தாங்களே சமாதானம் செய்துகொண்டாலும், அப்போதும் அவர்கள் பிசாசுகளால் பீடிக்கப்பட்டவர்களாகவே இருப்பார்கள். இரண்டு நிலைகளிலும், அவர்கள் பிசாசின் சாரமாக விளங்கும் மறுப்பினாலேயே(denial) பீடிக்கப்பட்டிருக்கிறார்கள். “பிசாசின் இருப்பை நம்புவதற்கு, கடவுளின் மீது நம்பிக்கை இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை” என்று இவானை அச்சுறுத்தும் அந்தச் சிந்தனை முழுமையடையும் புள்ளி இதுதான்.

பிசாசின் வசீகரத்திற்குப் பலியாகாத ஒரே ஒரு வகை மனிதன் இருக்கிறான்: அவன்தான் கருத்தியல்வாதி (ideologue). அவன் தனக்குள் இருக்கும் இருமையை வேரோடு பிடுங்கி எறிந்தவன். அவன் எதையும் விவாதிப்பதில்லை; மாறாகத் தன் கொள்கையை நிரூபிக்கிறான், மூளைச்சலவை செய்கிறான், மாற்றுக் கருத்தை மறுக்கிறான், பிறரைச் சம்மதிக்க வைக்கிறான், அல்லது அவர்களைக் கண்டிக்கிறான். மற்றவர்களை அவன் ‘தோழர்கள்’ என்று அழைத்தாலும், ஒருபோதும் அவன் அவர்களிடம் பேசுவதில்லை; தன்னுடைய சொந்தச் சிந்தனையோடுதான் அவன் பேசிக் கொண்டிருக்கிறான்.
நம் அனைவருக்குள்ளும் உறையும் அந்த ‘இன்னொருவனிடமும்‘ (the other) அவன் பேசுவதில்லை. அப்படி ஒருவன் இருப்பதை அவன் சந்தேகிக்கக்கூட மாட்டான். அவனைப் பொறுத்தவரை அந்த ‘இன்னொருவன்’ என்பது ஒரு கற்பனையான இலட்சியவாதம். ஒரு குட்டி-முதலாளித்துவ மூடநம்பிக்கை (petite-bourgeois superstition). எனவே, இந்தக் கருத்தியல்வாதி என்பவன் ஆன்மீக ரீதியில் ஊனமுற்றவன். அவனுள் சரிபாதி காணாமல் போய்விட்டது.
தஸ்தயெவ்ஸ்கி ஏழைகளையும், எளியவர்களையும், சிறுமைப்படுத்தப்பட்டவர்களையும், அநீதிக்கு ஆளானவர்களையும் நேசித்தார். ஆனால், தங்களை அவர்களின் ‘மீட்பர்கள்’ என்று அழைத்துக்கொண்டவர்கள் மீது அவர் கொண்டிருந்த ஆழமான வெறுப்பை ஒருபோதும் மறைத்ததில்லை. சுதந்திரம் என்ற சுமையிலிருந்து மனிதனை விடுவிக்கப் போகிறோம் என்று அவர்கள் செய்த பாசாங்கு அவருக்கு முற்றிலும் அபத்தமாகவே பட்டது. ஏனெனில், சுதந்திரம் என்பது பயங்கரமான, அதேசமயம் மிகவும் விலைமதிப்பற்ற ஒரு சுமையாகும்.
அவருடைய அந்த வெறுப்பிற்கு கருத்தியல்வாதிகளும் சற்றும் குறைவில்லாத தங்கள் வன்மையான வெறுப்பின் வழியாகவே பதிலளித்தார்கள். லெனின் தன் தோழியான இனெஸ் அர்மண்டுக்கு (Ines Armand) எழுதிய ஒரு கடிதத்தில், “படுசுமாரான தஸ்தயெவ்ஸ்கி” (the arch-mediocre Dostoevski) என்று அவரைக் குறிப்பிடுகிறார். மற்றொரு சந்தர்ப்பத்தில், “குப்பைகளுக்காக நான் என் நேரத்தை வீணடிப்பதில்லை” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
ஸ்டாலின் காலத்தில் அவர் கிட்டத்தட்டத் தடைசெய்யப்பட்ட ஓர் எழுத்தாளராகவே இருந்தார். இன்றும் கூட, அரசு அதிகார வட்டத்தில் அவர் ஒரு பிற்போக்குவாதியாகவும் (reactionary) எதிரியாகவுமே பார்க்கப்படுகிறார். ஆனால், அரசாங்கத்தின் இத்தனை எதிர்ப்புகளையும் மீறி, ரஷ்யாவில் அதிகம் வாசிக்கப்படும் புத்தகங்களாக அவருடைய நாவல்களே இன்றும் இருக்கின்றன. குறிப்பாக மாணவர்கள், அறிவுஜீவிகள், இன்னும் சொல்லப்போனால் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் மத்தியில் தஸ்தயெவ்ஸ்கியே அதிகம் வாசிக்கப்படுகிறார்.
ஒரு கொடுங்கோலன் தான்தோன்றித்தனமானவன், சபல புத்தி கொண்டவன். நீரோ (Nero), கலிகுலா (Caligula) போன்ற பித்தம் பிடித்த, நிதானமற்ற மனிதர்களின் அத்துமீறல்களுக்கு எதிராக, கொடுங்கோலர்களைக் கொன்றொழிக்கும் கத்தியே(regicide’s dagger) தீர்வாக தொன்றுதொட்டு இருந்து வந்திருக்கிறது. ஆனால், மிகவும் திட்டமிடப்பட்டதும், எந்தவொரு தனிமனிதனையும் சாராததுமான கருத்தியல் சர்வாதிகாரத்திற்கு எதிராக இந்தக் கத்தி எவ்விதப் பயனும் தராது. ஏனென்றால் ஓர் அருவமான கருத்தியலை எவராலும் படுகொலை செய்துவிட முடியாது.
இருப்பினும், துப்பாக்கிக் தோட்டாக்களால் துளைக்க முடியாத ஒரு கருத்தியல் விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது அல்ல. இதனால்தான், கருத்தியல் சர்வாதிகாரிக்குத் தன்னை வெளிப்படுத்திக்கொள்ள இரண்டே இரண்டு வழிகள் மட்டுமே தெரிந்திருக்கின்றன: ஒன்று தனிமொழி (monologue), மற்றொன்று உபதேசம் (lecture). ஒரு கருத்தியல்வாதியின் சர்வாதிகாரம் என்பது, ஒட்டுமொத்தச் சமூகத்தையும் ஒரு சதுரமாகவும், அதிலுள்ள ஒவ்வொரு மனிதனையும் ஒரு முக்கோணமாகவும் மாற்றிவிடத் துடிக்கும், வக்கிரமும் வறட்டுப் பிடிவாதமும் கொண்ட ஒரு பேராசிரியரின் சுயபுலம்பல்களுக்கு (soliloquy) ஒப்பானது.
இதன் காரணமாகவே, அவரது படைப்புகளின் மீது நாம் கொண்டிருக்கும் தீராத ஈர்ப்பைத் தாண்டி, தஸ்தயெவ்ஸ்கி நமக்கு ஒரு நிதர்சனமான உண்மையாகவும் விளங்குகிறார். அந்த நிதர்சனம், அறநெறியையும் அரசியலையும் சார்ந்தது. சமூகம் என்பது கணிதம் போட்டுப் பார்க்கும் கரும்பலகை அல்ல என்பதையும், எந்தச் சட்டகத்துக்குள்ளும் அடங்காத கணிக்க முடியாத உயிரினமான மனிதன், தன் மீதான அனைத்து வரையறைகளில் இருந்தும், கட்டாயங்களிலிருந்தும், – வடிவியல் நிபுணராக (geometrician) உருமாறி வரும் ஒரு சர்வாதிகாரியின் பிடியிலிருந்தும் கூட – தப்பித்துவிடுவான் என்பதையுமே அவர் நமக்குக் கற்பிக்கிறார்.
000
அடிக்குறிப்புகள்:
- பதினெட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த பிரெஞ்சு எழுத்தாளரான டி சேட், அற வரம்புகளை மீறிய கட்டற்ற காமத்தையும், வன்முறையையும் தன் நாவல்களில் எழுதியவர். பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணும் ‘சாடிசம்’ (Sadism) என்ற சொல் இவருடைய பெயரிலிருந்து உருவானது. அவருடைய நாவல்களில் வரும் சிற்றின்பவாதிகள் (Libertines), எந்தத் தார்மீக விதிகளுக்கும் கட்டுப்படாமல் உச்சகட்ட இன்பங்களைத் தேடி அலைவார்கள். ஆனால், எல்லா எல்லைகளையும் மீறிய பிறகு, அவர்களுக்கு எதிலுமே இன்பம் கிடைக்காமல் ஒருவித மரத்துப்போன உணர்ச்சியின்மை (numbness) ஏற்படும். எதிலுமே திருப்தியடைய முடியாத, ஒரு தீராத வெறுமையே பாஸ் குறிப்பிடும் அந்த “வக்கிர நோய்”. ↩︎
- ஆரம்பகால மற்றும் மத்திய காலக் கிறிஸ்தவத் துறவிகளிடையே (Desert Fathers) இது மிகவும் பிரபலமான ஒரு கருத்தாக்கம். பாலைவனத்திலோ அல்லது மடாலயங்களிலோ தனிமையில் நீண்ட தியானத்தில் இருக்கும் துறவிகளை, நண்பகல் வெயிலின் அதீத வெப்பமும் சோர்வும் தாக்கும். அந்த நேரத்தில் அவர்களுக்குப் பிரார்த்தனையில் மனம் லயிக்காது, எதிலும் நாட்டம் செல்லாது, ஆழ்ந்த சலிப்பும், மனச்சோர்வும், எங்காவது ஓடிவிடத்தோன்றும் இலக்கற்ற தவிப்பும் ஏற்படும். இதை அவர்கள் தங்களை ஒரு ‘நண்பகல் பிசாசு’ (Noonday Demon) தாக்குவதாக உருவகப்படுத்தினார்கள். தத்துவத்திலும் இறையியலிலும் இந்த ஆழமான ஆன்மீக வறட்சி மற்றும் சலிப்பையே ‘அசீடியா’ (Accidie) என்று அழைக்கிறார்கள். ↩︎

ஜனார்த்தனன் இளங்கோ
ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
சுழலும் உயிரினம் : ஜனார்த்தனன் இளங்கோ

உலகில் அதிகபட்சமாக ஏறத்தாழ இருபதாயிரம் வகைப் பறவைகள் இருக்கலாம் என்று பெரும்பாலான ஆய்வுகள் தெரிவிக்கிறது. இந்தியாவில் சுமார் ஆயிரத்து ஐநூறு பறவைகளும், குறிப்பாக தமிழ்நாட்டில் அறுநூறு வகைப் பறவைகளும் இருக்கலாம். பறவைகளின் உலகத்தின்மேல் ஆர்வம் ஏற்பட்டு அவற்றை கவனிக்கத் துவங்கும் ஒருவருக்கு சவாலையும் அதே சமயம் சோர்வையும் ஒருங்கே ஏற்படுத்தும் எண்ணிக்கை இது. அப்படியான ஒருவருக்கு இவ்வளவு பறவைகளின் பெயர்களையும் அவை ஒவ்வொன்றைப் பற்றிய தனித்துவமான தகவல்களையும் எதற்காக அறிந்து கொள்ள வேண்டும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. ஒருபுறம் பறவைகளின் வகைபாட்டியலும் அவை ஒவ்வொன்றின் தகவல்களஞ்சியமும் பலவகைகளில் அறிவியல், சூழியல் சார்ந்த ஆராய்ச்சிகளுக்கு இன்றியமையாததாக இருக்கிறது. எனினும் இவையெல்லாம் பறவைகளை அவதானிக்கவும், ரசிப்பதற்கும் விரும்பும் ஒருவருக்கு எவ்வளவு தூரம் உதவுகிறது என்றும் சிந்திக்கவேண்டியுள்ளது.
பறவைகளின் உலகை விரிவாக அறிவதற்கு செலுத்தவேண்டிய உழைப்பில் இருந்து தப்பிக்கும் மார்க்கமாக இக்கேள்வியை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை. ஏனென்றால் துவக்கத்தில் பறவைகளைப் பற்றிய அறிவு சேகரத்தில் ஈடுபடத் தொடங்கும் ஒருவர் பலவகையான இடர்களை நடைமுறையில் எதிர்கொள்கிறார். பறவை பார்த்தலில் ஈடுபடத் துவங்குகையில் ஒருவருக்கு அது புத்தம்புதிதாக இருப்பதனாலேயே அந்தச் செயல்பாட்டின் மேல் ஒருவித ஈர்ப்பு உண்டாகிறது. எனினும் தொடர்ச்சியாக ஈடுபடும்போது ஒருகட்டத்தில் அவர் அந்த செயல்பாட்டில் உள்ள மெய்யான சிக்கல்களை எதிர்கொண்டாக வேண்டியிருக்கிறது. அவரை அதுவரையிலும் அழைத்துவந்த அந்த ஆரம்பகால ஈர்ப்பு அப்போது நழுவிச் சென்றுவிடுகிறது.
பறவைகளை கவனிக்கத் துவங்கி அவற்றின் எண்ணற்ற வகைமாதிரிகளைப் பற்றிய குறைந்தபட்ச அறிமுகம் ஒருவருக்கு கிடைத்தவுடன் அவரைச் சுற்றி ஏராளமான வகைப் பறவைகள் இருப்பது ஒரு திடுக்கிடல் போல அவருக்குத் தெரியவருகிறது. பேருந்திலோ, ரயிலிலோ செல்லும் போது அவர் கடந்து செல்லும் மின்கம்பங்களை கொஞ்சம் கவனித்துப் பார்கையில் அதன்மேல் கரிச்சான்(Ashy Drongo), பச்சை பஞ்சுருட்டி(Green bee-eater), வென்முதுகு சில்லை(White-rumped munia), உழவாரன்(Palm swift), பனங்காடை(Indian roller) என ஏராளமான அழகிய புள்ளினங்கள் அமர்ந்திருப்பதைக் காண்கிறார். பெருநகரங்களான சென்னையிலும், பெங்களுருவிலும் உள்ள எந்த அடுக்குமாடி குடியிருப்பிலும் அதிகாலை வேளையில் செவிமடுக்கும்போது அவரால் ஒரு குயிலோசையை நிச்சயம் கேட்கமுடியும். இவ்விதம் அவர் எங்கு சென்றாலும் பறவைகளின் உலகம் அவரை உரசியபடியே உடன் வருகிறது. அதிலும் அவர் பறவைகளை பார்ப்பதற்கான பிரத்யோக ஈர்ப்பிடத்திற்கு(hotspot) செல்லும்போது, அவ்விடத்தை ஒருமுறை சுற்றி வருவதற்குள் அவருக்கு தெரியாத பத்து பதினைந்து புதிய பறவைகளையாவது பார்த்திருப்பார். இப்படிப் பார்க்கும் ஒவ்வொரு பறவையின் தோற்ற அடையாளங்களையும் தனித்தனியாக அவற்றின் பெயரை தெரிந்துகொள்வது வரை துல்லியமாக நினைவில் வைத்துக் கொள்வதே அவர் சந்திக்கும் மெய்யான முதல் இடராக இருக்கும். அதனால் துவக்கத்தில் இம்மாதிரியான கண்டறிதலுக்கு உதவும் சரியான பயிற்றுனரோ, நண்பர் குழுவோ அத்தகைய பயணங்களில் உடனிருப்பது அவருக்கு பெரிதும் உதவிகரமாக இருக்கிறது. தற்போதைய தொழில்நுட்ப வசதியில் ஒரு பறவையின் அங்க அடையாளங்களை, புகைப்படத்தை, அல்லது குரலைக் கொண்டு அடையாளம் காண்பது சுலபமாகி வருகிறது. எனினும் அறிமுகமில்லாத ஒரு பறவையை உடனிருப்பவரோடு விவாதித்துத் தெரிந்துகொள்ளும்போது அங்கு நிகழும் அனுபவப் பகிர்வு அப்பறவையைப் பற்றிய நினைவை நம்மில் கூடுதல் எடையுடன் பதியச் செய்கிறது.

இதற்கு அடுத்தபடியாக ஒரு பொது வகைமைக்கு கீழுள்ள வெவ்வேறு வகைப் பறவைகளை பிரித்தறிவது மற்றுமொரு அசலான சிக்கல். எடுத்துக்காட்டாக கதிர்குருவிகளில்(warbler) ஏறத்தாழ ஒரேமாதிரியான உருவ அடையாளங்கள் கொண்ட பல பறவைகள் உள்ளன. ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் பரவலாக காணப்படும் பச்சை கதிர்குருவியும்(green warbler), பழுப்பு-பச்சை கதிர்குருவியும்(greenish warbler) இதற்கு மிகச் சிறந்த உதாரணம். இவை இரண்டுமே ஆசிய-ஐரோப்பாவின் வேறு வேறு இடங்களில் இருந்து இந்தியத் துணைக் கண்டத்திற்கு வலசை வரும் பறவைகள். வெளித்தோற்றத்தில் உள்ள நுண்ணிய நிற வேறுபாட்டைத் தவிர்த்து பிற அனைத்தும் இவ்விரண்டு கதிர்குருவிகளுக்கும் ஒன்றுபோலவே இருப்பது. அதிலும் அவற்றின் வளரிளம்(juvenile) பருவத்தில் இந்த நிற வேறுபாடு இன்னும் மழுங்கலானது. நீண்ட காலம் வரை இந்த இரண்டுமே பழுப்பு-பச்சை கதிர்குருவியாகவே கருதப்பட்டு வந்தது. அவற்றைப் பற்றிய வாழிடம், வலசை இனப்பெருக்கம் ஆகிய தகவல்கள் திரட்டப்பட்டு தொடர் விவாதத்திற்கும் ஆராய்ச்சிக்கும் பின்னர் அவ்வினத்தின் கீழ் பரிணாம வளர்ச்சியில் மாற்றமடைந்த இருவேறு பறவைகள் அடங்கியிருப்பது கண்டறியப்பட்டது.
ஆரம்பத்தில் நாம் பார்த்தது இரண்டில் ஒருவகை பச்சை கதிர்குருவி என்று தெரிந்து கொள்வதே போதுமானதாக இருக்கும். எனினும் இந்த பரிணாம பின்புலத்தை அறிந்துகொண்டபின் அதைத் துல்லியமாக எந்த வகை கதிர்குருவி என்று அடையாளம் காண்வேண்டிய விழைவு இயல்பாக உருவாகிவிடுகிறது. அவற்றிற்கு இடையிலான மிக நுணுக்கமான வேறுபாடுகளை அறிந்து கொண்டு அவற்றை கவனிப்பதும் தவிர்க்க முடியாததாகிறது. அதுபோல இதன் மறுஎல்லையில் பறவைகளைப் பற்றி திரட்டப்படும் தகவல்கள் துல்லியமாகும் தோறும் பறவைகளின் வகைபாட்டில் இத்தகைய புதிய பகுப்புகள் தொடர்ந்து உருவாகியபடி இருக்கிறது.
துவக்கத்தில் ஒரு இனமாக அடையாளப் படுத்தப்படும் பறவையானது நாளடைவில் அதன் சொந்த வாழிடத்தில் இருந்து இரு வேறு திசைகளில் இடம் பெயர்ந்தவாறு இருக்கிறது. இந்த வாழ்நிலை மாற்ற பயணத்தில் அவை இரண்டும் தொடர்ச்சியாக தனித்துவமான மாறுதல்களுக்கு உட்படுகிறது. ஒரு புதிய வாழிடத்தில் இவை மீண்டும் சந்திக்கும் போது இந்த சுழற்சி ஒரு சுற்றி முழுமையடைகிறது. இங்கு அவை இரண்டிற்கும் இடையே எந்தவித இனக்கமும் இருப்பதில்லை. அவை ஒன்றை ஒன்று அடையாளம் கண்டுகொள்கிறது, பரஸ்பரம் அழைப்புகளை, பாடல்களை மற்றொன்று அறிந்து கொள்கிறது. இந்த பழைய பரிச்சயம் தொடர்ந்தாலும் ஒன்றின் எதிர்பாலினம் மற்றொன்றை பொருட்படுத்தவோ கவரவோ செய்வதில்லை. அதோடு ஒன்றிற்கு எதிராக மற்றொன்று அதன் வாழிட எல்லைலையும்(territory) வலுவாக தற்காத்துக் கொள்கிறது. விளைவாக இரண்டிற்கும் இடையே எந்தவித புதிய தொடர்பும், இனப்பெருக்கமும் நிகழாமல் அவை இரண்டும் இருவேறு இனங்களாக நீடிக்கத் துவங்குகிறது. இத்தகைய பரிணமப் பண்பு கொண்ட புள்ளினங்கள் சுழல்-வடிவ உயிரினங்கள்(ring species) என்று அழைக்கப்படுகின்றன. அதாவது ஒரு உயிரினம் இரண்டாக பிளவுபட்டு சுழன்று வந்து ஒன்றை ஒன்று மீண்டும் சந்திக்கும் போது இரண்டும் வேறுபட்ட உயிரினமாக மாறிவிடுகிறது.
பறவைகளின் உட்தொகுப்புகளுக்குள் காணக்கிடைக்கும் இந்த பாங்கு பழங்குடி மனிதனின் வாழ்க்கை முறையை வலுவாக நினைவுறுத்துகிறது. வளரிளம் பருவத்தில் தன் குடியை விட்டு வெளியேரும் பழங்குடிகள் நாளடைவில் தனி இனக்குழுவாக மாற்றமடைவதும், அத்தகைய பிற இனக்குழுக்களோடு விலக்கத்தை கடைபிடிப்பதும் இதையொத்திருக்கிறது. இதை நவீன உலகிலுள்ள பல இனக்குழுக்களிலும் பண்புகளோடு இணைத்து யோசிப்பது இன்னும் சுவாரஸ்யமானது. உதாரணமாக அயர்லாந்தில் வசிக்கும் பெரும்பாண்மையான ஐரிஷ் இன மக்கள் அமெரிக்காவில் குடியேறிய அமெரிக்க-ஐரிஷ் இன மக்களோடு தங்களை அடையளப்படுத்திக் கொள்ளவோ, கலாச்சாரத்தை பகிர்ந்துகொள்ளவோ இன்றளவும் விரும்புவதில்லை.
எவ்வளவு மாற்றங்களை கிரகித்துக்கொண்ட பின்னர் ஒரு உயிர் மற்றொரு இனமாகி வேறொன்றாகிறது? அல்லது பிறப்பெடுத்த உடனேயே ஒரு உயிரினம் வேறொன்றாகிவிடுகிறதா? ஒவ்வொரு உயிரினமும் இவ்விதம் எத்தனை சுழற்சிகளுக்கு உட்படுகிறது? இந்த சுழற்சியெல்லாம் எங்கிருந்து தொடங்கியிருக்கும்?
உலகின் முதல் உயிரினம் இரண்டாகச் சுழன்று, கணக்கிலடங்கா வகையில் பல்கிப்பெருகி இப்போது ஒரு முனையில் மனிதனாகவும் மற்றொரு முனையில் ஒரு பறவையாகவும் மாற்றம் கொண்டு இங்கு மீண்டும் சந்தித்துக் கொள்கிறது. அந்த பறவைக்கு எப்படியோ மனிதனைப் பற்றி தெரிந்திருக்கிறது, அதனால் தான் அது மனிதச்சுவடை அஞ்சி அவனை தன் உலகிற்கு வெளியே வைக்கிறது, இல்லையா? ஒருவேளை அதற்கு இது எல்லாமும் தெரியுமா? அவனுக்கு? அவனுக்கு ஏதேனும் தெரிந்திருக்கிறதா? தெரிந்ததுபோல நடந்துகொள்கிறானா? அவனால் எவ்வளவு தூரம் புரிந்துகொள்ள முடியும்? அவன் எப்படியும் எல்லாவற்றையும் புரிந்துகொண்டுவிடுவானா? இப்போது இருவருக்கும் இடையே எந்த இணக்கமும் இல்லையென்று தெரிகிறது. எனினும் பழைய பரிச்சயம் மட்டும் இன்னும் ஏதொவொரு விதத்தில் தொடர்கிறதென்று தோன்றுகிறது.
*

மேற்கூறிய நடைமுறைச் சிக்கல்களை எதிர்கொள்ளும் ஒருவர் ஒருகட்டத்தில் சோர்வுற்று, பறவைகளை -அதைப் பற்றிய எந்தவொரு தகவலும் தெரியாமல்- வெறுமே ஒரு அழகிய உயிர் என்ற அளவில் பார்த்து ரசித்தாலோ புகைப்படம் எடுத்தாலோ போதும் என்று கருதிவிடவே வாய்ப்புள்ளது. எனினும் ஒரு பறவையை முதல்முறையாகக் காணும்போது அது என்ன பறவை என்று தெரிந்துகொள்வதற்காக நம்முள் திரண்டெழும் கிளர்ச்சி உணர்வுப்பூர்வமானது. இந்தக் கிளர்ச்சியை தொடர்ந்து அனுபவிப்பதே அதன் சிக்கல்களினால் உருவாகும் சோர்வைக் கடக்கும் மிகச்சிறந்த வழி.
அடர்காட்டிற்கு பறவைகளைக் காண ஒரு நடை செல்கிறோம். அப்போது நமக்கு அறிமுகமில்லாத ஒரு புதிய பறவை மரஉச்சியில் இலைகளுக்கிடையே முன்னும் பின்னும் நகர்ந்து அமர்கிறது. உடனே நம் பைனாகுலரின் கண்கள் அதைப் பின்தொடர ஆரம்பிக்கிறது. அதே வேளையில் நம் செவிகளும் அந்த இடத்தின் ஒட்டுமொத்த ஓசையையும் கூர்ந்து கவனிக்கத் துவங்குகிறது. அப்பறவை எப்போது வேண்டுமானாலும் நம் கண்களை விட்டு மறைந்து சென்றுவிடக்கூடும் என்பதை நாம் உள்ளூர உணர்ந்திருப்பதால் நம்முடைய புலன்கள் அக்கணத்தில் தீவிரமாக விழிப்புநிலையில் செயலாற்றுகிறது. கிளையில் ஓரிடத்தில் அப்பறவை அமர்ந்ததும் அதுவரை சுழன்றுவந்த பைனாகுலர் அதன் மேல் கவிழ்கிறது. பறவையை இருத்திவைத்தலில் வெற்றியடைந்ததும் மனம் பின்வாங்கி இப்போது அதன் முழு கட்டுப்பாட்டையும் கண்களுக்கு வழங்குகிறது. பார்வைப்புலத்தில் நமக்கும் பறவைக்கும் இடையேயுள்ள பிற எல்லாவறற்றையும் பைனாகுலர் வடிகட்டி நம் கண்களின் முழு கவனத்தையும் பறவையின் மேல் குவிக்கிறது. தற்போது பறவையின் வெளித்தோற்றத்தில் உள்ள ஒவ்வொன்றும் துலக்கம் பெறத் துவங்குகிறது. அதன் கண்கள், மூக்கு, கால்கள், சிறகு என அதன் உருவ அமைப்பை, உடலின் நிற வேறுபாடுகளை, அவை அசையும் விதத்தை என்று அதன் ஒட்டுமொத்ததையும் நாம் ஒரே நேரத்தில் தனித்தனியாக கவனிக்கிறோம். கண்களின் வழியாக கிடைக்கத் துவங்கும் தகவல்களைக் கொண்டு நம் மனம் அது என்ன பறவை என்று ஊகிக்க முயல்கிறது. திட்டவட்டமாக ஊகிக்க முடியாத பட்சத்தில் தொடர்ச்சியாக நம்முள் ஒப்பீடுகளும், அந்த ஒப்பீடுகள் சரியா தவறா என்னும் முடிவுகளின் விளைவாக மேலும் பல ஒப்பீடுகள் வரிசையாக நடந்தேறுகிறது. அதோடு இந்த தொடர் ஒப்பீடுகள் நம் கண்கள் மேற்கொண்டு கவனிக்க வேண்டியவற்றையும் முடிவு செய்தபடி இருக்கிறது. இவ்வாறு நம் புலன்களும் மனமும் அந்தத் தருணத்தில் நுட்பமாக விஷயங்களை நோக்கி படிப்படியாக ஆழ்ந்து செல்கிறது.
அதுபோல இங்கு பைனாகுலர் அல்லாமல் ஒரு காமிராவின் துணையுடன் ஒரு பறவையை முதன்முதலாகப் பார்க்கும்போது இதைப் போன்றதொரு அனுபவம் நமக்குள் ஏற்படுவது சந்தேகமே. ஏனெனில் புகைப்படத்தைக் கொண்டு சாவகாசமாக தெரிந்துகொள்ள முடியும் என்கிறபோது நம் புலன்கள் அதேயளவு விசைகொள்வதில்லை. கூர்ந்து கவனிக்கவேண்டிய தேவையோ, அப்படிக் காண்பவற்றை உடனடியாக ஆலோசனைக்கு உட்படுத்தவேண்டிய தேவையோ அப்போது இல்லாமல் போகிறது. இதனால் ஒரு பறவையைக் கண்ட அந்த முதற்கணம் நம்மில் அழுத்தமான எந்தவொரு விளைவையும் உண்டாக்குவதில்லை. காமிராவின் கோணத்திற்குள் அப்பறவையை இருத்திவைத்து புகைப்படம் எடுப்பதோடு அந்த அனுபவம் பெரும்பாலும் நின்றுவிடுகிறது.
கானுயிர்களை புகைப்படம் எடுப்பதென்பது அதனளவில் ஒரு தனித்த கலை. அதுபோல பறவைகளை புகைப்படம் எடுப்பதும் பலவகைகளில் அதன் அறிமுகத்திற்கு அவசியமானது. எனினும் பறவைகளை ரசிக்கவும் அவதானிக்கவும் முற்படும் ஒருவர் ஆரம்பகாலத்தில் காமிரா உண்டாக்கக்கூடிய இப்படியான எதிர்மறை விளைவுகளை கவனத்தில் கொள்வது அவசியம். அதே சமயம் ஒரு நல்ல பைனாகுலர் அருவருக்கு பொருத்தமான துணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
***

ஜனார்த்தனன் இளங்கோ
ஜனார்த்தனன் இளங்கோ, மென்பொருள் பொறியியலாளர். சொந்த ஊர் திருவாரூரைச் சேர்ந்த திருத்துறைப்பூண்டி. இலக்கியம் தவிர தத்துவம், கட்டிடக்கலை, பறவையியல் ஆகிய துறைகளில் ஆர்வமுண்டு
₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹
Comments
Post a Comment